புதுக்கோட்டையில் பலத்த மழை
கோடை காலத்தில் புதுக்கோட்டையில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் புதுக்கோட்டையிலும் வெயில் சுட்டெரித்தது. இருப்பினும் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலையில் லேசாக வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. மாலை 5 மணிக்கு மேல் மழை தூறி பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் செல்ல...செல்ல... பலமாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
கோடை காலம் தொடங்கிய நிலையில் புதுக்கோட்டையில் மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கோடை கால விவசாயத்திற்கு போதுமான நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயிலின் உச்சபட்சமான அக்னி நட்சத்திரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிற நிலையில் நேற்று மழை பெய்தது பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்தது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
கீரனூர்
கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்தநிலையில், அரங்குளநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு கொட்டும் மழையிலும் நடந்தது. இந்த மழையால் கோவில் வாசலில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் குளங்கள் நிரம்பி வருகின்றது.
ஆதனக்கோட்டை, அறந்தாங்கி
ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் அறந்தாங்கி பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.