ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த மழை
ராமேசுவரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமேசுவரம்,
பலத்த மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வந்தது. கோடை கால சீசன் முடிந்த நிலையிலும் கடந்த 3 மாதத்திற்கு மேலாக மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே லேசாக மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
பலத்த மழையால் ராமநாதபுரம்-ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமரையா கோவில், பாரதி நகர் உள்ளிட்ட சில இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதேபோல் நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.
மகிழ்ச்சி
இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் நேற்று காலை ½ மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் பஸ் நிலையம் செல்லும் சாலை, அபயஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தின் முன்பும், தங்கச்சிமடம் தென்குடா ரெயில்வே சுரங்க பாதையிலும் மழைநீர் தேங்கியது. மேலும் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், மண்டபம் கேம்ப் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.