சேலம் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழை: 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் வேதனை


சேலம் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழை:  50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; பயிர்கள் தண்ணீரில் மூழ்கின  விவசாயிகள் வேதனை
x

சேலம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்ததால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தோட்டங்களுக்குள் புகுந்த தண்ணீர் பயிர்களை மூழ்கடித்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சேலம்

பலத்த மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமானது முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. சேலத்தில் நேற்று முன்தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மதியம் மீண்டும் மழை ெபய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடியது.

இந்த மழையால், சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

மாவட்டத்தில்....

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக ஏற்காடு, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையாக கொட்டித்தீர்த்தது.

நேற்று காலை நிலவரப்படி பெத்தநாயக்கன்பாளையத்தில் 10 மி.மீட்டர், ஏற்காட்டில் 6.8 மி.மீட்டர், ஓமலூரில் 2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்றொரு புறம் பலத்த மழை பெய்தது. இதனால் தேவூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிக்கிழான் திட்டு, மணக்காடு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

காவேரிப்பட்டி பரிசல் துறையில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராகு கேது கோவில், கம்பத்தையன் கோவில்களை தண்ணீர் சூழ்ந்தது, அண்ணமார் கோவில் பகுதியில் பிரதான சாலையில் உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் எடப்பாடியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பவானிக்கு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டன.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

இதனால் இந்த வழியாக பயணம் செய்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதுதவிர அந்த பகுதியில் உள்ள நீரேற்று நிலையங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் உள்ளிட்ட வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்களை மூழ்கடித்துள்ளன. இதுதவிர காவிரி கரையோர கிராமங்களில் மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது.

வெள்ளம் பாதித்த இடங்களை சங்ககிரி வருவாய் கோட்டாச்சியர் சவுமியா, தாசில்தார் பானுமதி, வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் விரைந்து வந்தனர். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன.

பாலத்தை மூழ்கடித்த மழை

ஏற்காட்டில் நேற்று மதியம் 3 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு கிராமம் மலைப்பாதை வழியாக குப்பனூர் செல்லும் சாலையில் வாழவந்தி கிராமத்தை அடுத்துள்ள ஆத்துப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பெய்த மழையால் குப்பனூர் பகுதியில் திருமணிமுத்தாற்றில் தரைபாலம் உடைந்து தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் ஓடியது.

நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை

ஆத்தூர் அருகே ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் மழைக்காலங்களில் தண்ணீர் வருவது வழக்கம். நேற்று மதியம் வாழப்பாடி கல்வராயன் மலை பகுதிகளில் பெய்த மழையால், ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக அளவில் தண்ணீர் விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

மேட்டூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. மேலும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து வாழை, தென்னை, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சூழ்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story