சிங்கம்புணரி பகுதியில் பலத்த மழை: சாலையில் உருண்டு விழுந்த பாறைகள் போக்குவரத்து பாதிப்பு
சிங்கம்புணரி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மலையிலிருந்து பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மலையிலிருந்து பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.
கனமழை
சிங்கம்புணரி வட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். குறிப்பாக வேங்கைபட்டி, கோவில்பட்டி, முட்டாக்கட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி, பிரான்மலை, மேலவண்ணாரப்பு, கட்டுக்குடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை நம்பிதான் விவசாயம் நடைபெறுகிறது. இதில் பிரான்மலை, ஒடுவன்பட்டி, மேல வண்ணாரப்பு ஆகிய பகுதிகள் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கன மழை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இந்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்நிலையில் கனமழையால் ஒடுவன்பட்டி மலையில் இருந்து பாறைகள் உருண்டு மேல வண்ணாரப்பு சாலையில் விழுந்தன.
இதனால் நேற்று காலை ஒடுவன்பட்டியில் இருந்து மேல வண்ணாரப்பு செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் சிறு,சிறு பாறைகள் அகற்றப்பட்டது. மேலும் பெரிய பாறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.