தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை


தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை
x

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழைபெய்துமாக இருந்து வருகிறது. அதே போல நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னரும் மழை விடாமல் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்திருந்த இடங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வந்தன. இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி, நாஞ்சிக்கோட்டை

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் நேற்று இரவு இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழை குறுவை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்று இரவு இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழை குறுவை நெல் சாகுபடி மற்றும் சோளம், கரும்பு பயிர்களுக்கு மிகவும் பயன் உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story