தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை

தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடை செய்த உளுந்தை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.
திடீர் மழை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் மழை பெய்தது. இந்த மழையில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டது. இதே போல் அறுவடைக்கு தயாரான உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக மழை இன்றி காணப்பட்டது. நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது வழக்கத்தை விட அதிகமாக வியர்வையின் தாக்கமும் இருந்தது. இந்த நிலையில் மதியத்துக்குப்பிறகு வாகனம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில்மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. அரைமணி நேரம் இந்த மழை நீடித்தது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது
இந்த மழை காரணமாக தஞ்சை மாநகரில் உள்ள 4 வீதிகளிலும் சாலைகளில் சாக்கடை நீருடன் மழைநீரும் கலந்து வெளியேறியது. மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக ஆங்காங்கே அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக வெளியே சென்று இருந்தவர்கள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர்.
வல்லம், நாஞ்சிக்கோட்டை
இதேபோல் தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.
சானூரப்பட்டி திருச்சி சாலையில் உள்ள பாலத்தின் அருகே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமடைந்தனர்.
நாஞ்சிக்கோட்டை, மாதாக்கோட்டை, விளார், சொக்கலை, ரெங்கநாதபுரம், புதுப்பட்டினம், மருங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. சித்திரை பட்டத்தில் விதைக்கப்பட்ட உளுந்து, பயறு, எள், மக்காச்சோளம் போன்ற பயிர்களை தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த உளுந்து, பயறு செடிகளை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.






