மாவட்டத்தில் பலத்த மழை
மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பலத்த மழை
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் இருந்து வந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு லேசான தூரலுடன் மழை பெய்ய தொடங்கியது.
பின்னர் இடி-மின்னலுடன் பலத்த மழையானது. இந்த மழை 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் பொதுமக்களும், பள்ளி முடித்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டனர். சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியதால் நடந்து சென்றவர்களும், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்களில் சென்றவர்களும் பாதிக்கப்பட்டனர்.
கண்மாய்களுக்கு நீர்வரத்து
பல இடங்களில் மழைநீர் வடிகால் நிரம்பி சாலையில் கழிவுநீர் ஓடியது. நகர் முழுவதும் உள்ள வாருகால்கள் நிரம்பி சாலையில் ஓடியது. இதேபோல் சிவகாசி சுற்றி உள்ள பகுதியில் பெய்த மழைநீர் பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய், பொத்தமரத்து ஊருணி, மணிக்கட்டி ஊருணிகளுக்கு வந்தது. இதனால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்தது.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் நேற்று மாலை பெய்த மழையால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும், நகரின் முக்கிய நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
எம்.எல்.ஏ. ஆய்வு
நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மழை நீர் தேங்கி இருந்த பகுதிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதனை சரி செய்ய வலியுறுத்தினார். சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகள் நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று தேங்கி இருந்த மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கையை எடுத்தனர். சிவகாசி ரெயில்வே பீடர் ரோட்டில் ஒரு மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, தாணிப்பாறை, பிளவக்கல் அணை, சுந்தரபாண்டியம், மகாராஜபுரம், கோட்டையூர், தைலாபுரம், இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. தாயில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர், மந்திரி ஓடை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
விபத்து அபாயம்
விருதுநகரில் 2 மணி நேரம் பெய்த மழையினால் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீர் முறையாக வடிந்து செல்லாத நிலையில் பஸ் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோன்று ெரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையான ெரயில்வே பீடர் ரோட்டிலும் பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் பள்ளங்களில் தண்ணீர் நிறைந்து இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.