மாவட்டத்தில் பலத்த மழை
மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. நேற்றும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மதியம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு மூழுவதும் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் திருச்சி மாநகர் முழுவதும் சாலையில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ளே பஸ் நிறுத்தும் இடத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் மேலப்புதூர் சுரங்கப்பாலத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்தனர். மேலும் கே.கே.நகர், பொன்மலைப்பட்டி, ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, முசிறி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.