மாவட்ட பகுதிகளில் பலத்த மழை


மாவட்ட பகுதிகளில் பலத்த மழை
x

மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

திருச்சி

துறையூர்:

பலத்த மழை

துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பகல் நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதைத்தொடர்ந்து பலத்த இடியுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீருடன் கழிவுநீர் வெளியேறியது. இதனால் சாமிநாதன் தினசரி காய்கறி மார்க்கெட் சாலை, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, அண்ணா பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளித்தது. கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால், கடும் அவதியுற்ற பொதுமக்கள் தற்போது பெய்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

உப்பிலியபுரம்

இதேபோல் உப்பிலியபுரம் பகுதியில் நேற்று மாலை முதலே இடி, மின்னலுடன் மழை பெய்தது. முருங்கப்பட்டி, நாகநல்லூர், உப்பிலியபுரம், பச்சமலை, பச்சபெருமாள்பட்டி, தங்கநகர், புளியஞ்சோலை, பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொல்லிமலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததால் புளியஞ்சோலை அய்யாற்றில் நீர்ப்பெருக்கு இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் நேற்று மாலை முதல் பெய்த மழையால் சிறுநாவலூர் ஊராட்சி ரெட்டியாப்பட்டி வேப்பமர வீதி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதில் ராமாயி என்ற கூலித்தொழிலாளியின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததில், அந்த வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் தண்ணீரில் மூழ்கின.

தொட்டியம், தா.பேட்டை

தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளில் கடுமையான வெயிலின் காரணமாக, அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை மற்றும் இதர பயிர்கள் மிகவும் வாடிய நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர், சீலைபிள்ளையார்புதூர், கணபதிபாளையம், உன்னியூர், காரைக்காடு, அரசலூர், தோளூர்பட்டி, நத்தம், காடுவெட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தா.பேட்டை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் தா.பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வானில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், கோடை மழை நீண்ட நேரம் பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story