திருவாரூரில், வெயிலின் தாக்கத்தை தணித்த கனமழை
திருவாரூரில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாரூரில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுட்டெரித்த வெயில்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வந்தனர். மழை எப்போது பெய்யும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டது. இதனை தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது.இந்த மழை சற்று வலுத்து அதிவேக காற்று, இடியுடன் வெளுத்து வாங்கியது.
கனமழையால் மகிழ்ச்சி
பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வீட்டிற்கு திரும்பும் நேரத்தில் கனமழை பெய்தது. ஆனாலும் மாணவர்கள் பலர் மழையில் நனைந்தபடி உற்சாகமாக வீடு திரும்பினர்.
வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதற்கு சற்று சிரமப்பட்டனர். கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஒட்டிகள், நடந்து செல்பவர்கள் சற்று அவதி அடைந்தனர். வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென கனமழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மன்னார்குடி- கூத்தாநல்லூர்
மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ந்த காற்று வீசியது. தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை பயிர்கள் காய்ந்து வரும் இந்த நேரத்தில் பெய்துள்ள மழை சற்று நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் கூறினர்.
கூத்தாநல்லூர் பகுதியிலும் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த காற்று வீசியது. இதனையடுத்து லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, பொதக்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, கோரையாறு, பண்டுதக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இடி மின்னலுடன் பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.