திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை:தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன


திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை:தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 12 July 2023 12:45 AM IST (Updated: 12 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. புடலங்காய் கொடிகளும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. புடலங்காய் கொடிகளும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

திடீர் மழை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இநத் நிலையில் திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த மழை பெய்தது.

திருவாரூரில் பெய்த கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பி உரசியதால் பள்ளி மாணவன் உயிரிழந்த சோகமும் நடைபெற்றது. மேலும் இந்த மழையுடன் காற்று வீசியது பயிர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

புடலங்காய் கொடி

கொரடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த புடலங்காய், பீர்க்கங்காய் கொடிப்பந்தல்கள் சேதம் அடைந்தன. எண்கண் கிராமத்தில் புடலங்காய், பீர்க்கங்காய் கொடிகளுக்கு பந்தல் போடப்பட்டு அதில் காய்கள் காய்த்து தொங்கின.

அறுவடைக்கு தயாரான நிலையில் பெய்த மழையால் எடை தாங்காமல் பந்தல்களுக்கு அமைக்கப்பட்ட மூங்கில் மரக்கம்புகள் முறிந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள புடலங்காய் கொடி, பீர்க்கங்காய் கொடி ஆகியவை பந்தலுடன் சாய்ந்து தரைமட்டமாயின. இதனால் காய்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் ேவதனை தெரிவிக்கிறார்கள்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'நோய் தாக்குதல் போன்றவற்றில் இருந்து பயிர்களை காப்பாற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் புடலங்காய் கொடி பந்தலும், பீர்க்கங்காய் கொடி பந்தலும் சாய்ந்து காய்களும், கொடிகளும் சேதமடைந்திருப்பது வேதனை தருகிறது. இதுபோல் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வெண்ணாறு லயன் கரை தெருவில் பெரிய தென்னை மரம் ஒன்று மின் கம்பி மீது விழுந்து அங்கிருந்த வீட்டின் மேற்கூரையில் சாய்ந்தது.

அதிர்ஷ்டவசமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்ததால் உயிர்சேதம் இல்லை. அதேபோன்று ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டு தோட்டத்தில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன. இந்த பகுதிகளில் மின் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை மின் ஊழியர்கள் இரவோடு இரவாக சீரமைத்தனர்.

காய்ந்த வயல்கள்

மேட்டூர் அணை திறந்த பிறகு விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு வயல்களை தயார் செய்து நெல் விதைத்து இருந்தனர். பாசன வாய்கால்களில் சரியாக தண்ணீர் செல்லாததால் ெ்நல் விதைப்பு செய்யப்பட்ட வயல்கள் தண்ணீரின்றி காய்ந்து வந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்ததால் காய்ந்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதன் மூலம் ஓரளவுக்கு நன்மை கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.

1 More update

Next Story