தூத்துக்குடியில் சாரல் மழை; பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை


தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 2 சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சாரல் மழை

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு இருந்தது. வெயில் முகம் காட்டவில்லை.

நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நேற்று காலை 9 மணி வரை நீடித்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இந்த மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்தது. அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மொத்தம் 3 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் மாண்டஸ் புயல் காரணமாக 2 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. காலை 10.30 மணிக்கு வரக்கூடிய விமானம் மட்டும் வந்து ஆட்களை இறக்கி ஏற்றி சென்றது.

இதேபோல் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் விமானமும் வழக்கம் போல் வந்து சென்றது.

கடற்கரை வெறிச்சோடியது

தூத்துக்குடி மாவட்டத்தில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகளும், பல ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் தங்களது படகுகளை கடலில் இருந்து வெளியில் கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். துறைமுக கடற்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

புயல் குறித்து வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நேற்றும் தொடர்ந்து 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

மழை அளவு

நேற்று காலை 6 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

தூத்துக்குடி- 3, ஸ்ரீவைகுண்டம்-2, திருச்செந்தூர்-5, காயல்பட்டினம்-5, குலசேகரன்பட்டினம்-4, சாத்தான்குளம்-4, எட்டயபுரம்-2.2, வைப்பார்-2, கீழஅரசடி-1


Next Story