விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று காலையில் சாரல்மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்துக்கு மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு விட்டு, விட்டு மாலை வரை மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக விழுப்புரம் நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, ராஜகோபால வீதி, சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. அதுபோல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
இதேபோல் அரசூர், மயிலம், திண்டிவனம், மரக்காணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. அதுபோல் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.