விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். அதிகபட்சமாக வானூரில் 10 செ.மீ. மழை பதிவானது.
விழுப்புரம்
கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை இடைவிடாமல் அடை மழையாக தூறிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு சில மணி நேரம் மழை ஓய்ந்த நிலையில் நள்ளிரவில் கனமழை பெய்தது. விழுப்புரம் மட்டுமின்றி விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், மயிலம், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் இடி- மின்னலுடன் கூடிய கனமழையாக கொட்டித்தீர்த்தது. இந்த மழை நேற்று காலை 6 மணி வரை விட்டுவிட்டு பெய்தது.
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக விழுப்புரம் பகுதிகளில் பெய்த கனமழையினால் விழுப்புரம் சாலாமேடு, வழுதரெட்டி, வ.உ.சி. நகர், காந்தி நகர், பாண்டியன் நகர், பொன் அண்ணாமலை நகர், மணிநகர், கணேஷ் நகர், சித்தேரிக்கரை, என்.ஜி.ஜி.ஓ. காலனி, வி.ஜி.பி. நகர், நித்யானந்தா நகர், சாரதாம்பாள் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள், அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர்.
மரம் விழுந்து வீடு சேதம்
மேலும் கனமழையால் நள்ளிரவில் விழுப்புரம் அருகே பில்லூர் ராமநாதபுரம் மந்தக்கரை பகுதியில் இருந்த 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகில் இருந்த ஆறுமுகம்(வயது 70) என்பவரின் கூரை வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அந்த வீடு பயன்பாடின்றி இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அதுமட்டுமின்றி மரம் முறிந்து விழுந்ததில் அதே பகுதியில் பிரபு என்பவரின் வீட்டு முன்புள்ள படிக்கட்டுகள் உடைந்தும், தரணிதரன், திருசங்கு ஆகியோரின் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. அதோடு மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியுற்றனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
விழுப்புரம் அருகே காணைகுப்பம் பகுதியில் 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்தவர்கள் அக்கம், பக்கத்து வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதையறிந்து வந்த காணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் வெட்டி தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அதுபோல் விழுப்புரம் சாலாமேடு ஆசாகுளம் நரிக்குறவர் காலனியில் 2 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதோடு அங்குள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையில் பள்ளம்
கனமழையால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கப்பியாம்புலியூர் பகுதியில் சாலையோரமாக மண் அரிப்பு ஏற்பட்டு பெரியளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், அவ்வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு முழுவதும் கனமழை பெய்ததால் மாணவ- மாணவிகளின் நலனை கருதி நேற்றும் 2-ம் நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றும் காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.
தரைப்பாலங்கள் மூழ்கின
கனமழையால் விழுப்புரம் அருகே எஸ்.மேட்டுப்பாளையத்துக்கும் பரசுரெட்டிப்பாளையத்துக்கும் இடையேயான தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் எஸ்.மேட்டுப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பில்லூர்-சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் ஆனாங்கூர், பில்லூர், தென்மங்கலம், அரசமங்கலம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட சுமார் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் மற்றும் வேலைக்கு செல்லவும் வெகுதூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் வந்து பின்னர் பண்ருட்டி செல்கின்றனர். இதேபோல் பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குயிலாப்பாளையத்தில் உள்ள தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மேற்கண்ட தரைப்பாலங்களின் இருபுறமும் பொதுமக்கள் செல்லாதவாறு போலீசார், தடுப்புக்கட்டைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வானூர்- 101
கோலியனூர்- 96
வளவனூர்- 92
கெடார்- 87
மரக்காணம்- 81
சூரப்பட்டு- 75
முண்டியம்பாக்கம்- 74.60