விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் கனமழை
விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் மரங்கள் மற்றும் மின்மாற்றி சாய்ந்தன.
விராலிமலை
சித்திரை மாதத்தில் அக்னி வெயிலானது பொதுமக்களை வாட்டி வதைக்கும். இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்டவைகளை பருகி உடல் சூட்டை தணித்துகொள்வர். ஆனால் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அவ்வப்போது கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் விராலிமலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து திடீரென காற்றும், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இந்த காற்றுடன் கூடிய திடீர் மழையால் விராலிமலை அருகே கல்குடி பகுதியில் உள்ள மின்மாற்றி திடீரென சாய்ந்தன. அதேபோல் 5-க்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
அன்னவாசல்
அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது. இருப்பினும் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் நேற்று இரவு திடீரென அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம் குடுமியான்மலை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருமணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையினால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகியது. முக்கண்ணாமலைப்பட்டியில் வீசிய பலத்த காற்றால் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த பழமையான மரம் ஒன்று சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் செல்ல வேண்டியவர்கள் மாற்று பாதையில் சென்றனர். அன்னவாசல் பகுதிகளில் பலத்த காற்றால் மின்தடை ஏற்பட்டது.