உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை
உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் வானில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதில் உடையார்பாளையம், முனியத்தரியன்பட்டி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், தத்தனூர், வெண்மாண்கொண்டான், மணகெதி, சோழங்குறிச்சி, அழிசிகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணியளவில் இருந்து இரவு 8 மணி வரை மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழையால் உடையார்பாளையம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நனைந்தபடி சென்றனர்
இதேபோல் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 10 மணி வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி குளம், குட்டை, ஏரிகளில் சென்றடைந்தது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.