தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில், கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக உக்கிரமாக இருந்த கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கம், திருப்பத்தூர், பாளையங்கோட்டை ஆகிய 3 இடங்களில் மட்டும் 100 டிகிரியை தாண்டி இருந்தது. நேற்றும் பல இடங்களில் மழை பெய்ததாலும், மேகக்கூட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலும் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அந்தவகையில் நேற்று பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 97.7 டிகிரி தான் பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் அதைவிட குறைவாகவே வெயில் பதிவானது. பெரும்பாலான இடங்களில் இயல்பாக பதிவாகும் அளவைவிட 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை வெயில் குறைந்திருந்தது.
13 மாவட்டங்களில் இன்று கனமழை
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால், கோடை வெயிலின் கோரத் தாண்டவத்துக்கு சற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழை அளவு
மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், போளூர் 4 செ.மீ., சின்கோனா, சின்னக்கல்லாறு தலா 2 செ.மீ., சோலையாறு, நெடுங்கல், கெலவரப்பள்ளி அணை, ஆம்பூர், தண்டராம்பட்டு, மஞ்சளாறு, வால்பாறை தலா 1 செ.மீ. மழை பெய்திருக்கிறது.
நகரை குளிர்வித்த மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே தூரல் மழை பெய்தது. நேற்று காலை லேசான மழை பெய்ய தொடங்கியது. மதியம் வரை மழை நீடித்தது. இதனால் சென்னை நகரே குளிர்ந்து போனது.
கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் தவித்து போன மக்களுக்கு, இந்த திடீர் மழை நிம்மதியை கொடுத்தது. பூமி குளிர்ந்ததால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.