தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x

வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் 29-ந் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 2 தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

மேலும், இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மற்றும் 5-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், செங்குன்றம் 13 செ.மீ., பெரம்பூர் 12 செ.மீ., சென்னை கலெக்டர் அலுவலகம், தண்டையார்ப்பேட்டை, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, மண்டபம், பொன்னேரி தலா 10 செ.மீ., அயனாவரம் 9 செ.மீ., தக்கலை, நுங்கம்பாக்கம், சோழவரம் தலா 8 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், எம்.ஜி.ஆர். நகர், நந்தனம் தலா 7 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், இரணியல், வேதாரண்யம் தலா 6 செ.மீ., ஏ.சி.எஸ். கல்லூரி, அம்பத்தூர், நாகப்பட்டினம், பெருஞ்சாணி அணை, குளச்சல், சுருளக்கோடு தலா 5 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்திருக்கிறது.

மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Next Story