தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை விலகிவந்தாலும், கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக வடஇலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

கனமழை

நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை மறுதினம் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

13-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சோளிங்கர், பூதலூர் தலா 9 செ.மீ., ராமேஸ்வரம், சிவகாசி, ஆர்.எஸ்.மங்கலம் தலா 7 செ.மீ., காரியாபட்டி, திருக்காட்டுப்பள்ளி, மதுரை தெற்கு, பரமக்குடி, ஆர்.கே.பேட்டை தலா 6 செ.மீ., பெரம்பலூர், தல்லாகுளம், திருத்தணி, திருப்புவனம், விரகனூர் அணை தலா 5 செ.மீ., துறையூர், தண்டாரம்பேட்டை, வாலாஜா, சித்தம்பட்டி, வீரகனூர், பாம்பன், தங்கச்சிமடம், தீர்த்தாண்டதனம், கல்லக்குடி, கீழஅணைக்கட்டு தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.


Related Tags :
Next Story