21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் 21, 22-ந் தேதிகளில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை காலத்தின் முதல் 2 மழைப்பொழிவுகள் எதிர்பார்த்த மழையை கொடுத்த நிலையில், 3-வது மழைப்பொழிவு ஏமாற்றத்தை தந்ததோடு, அதன் பின்னர் மழைக்கான வாய்ப்பும் குறைந்திருந்தது.
அதனை போக்கும் வகையில், கடந்த 9-ந் தேதி தமிழக பகுதிகளில் மாண்டஸ் புயல் கரையை கடந்ததால், தமிழகத்தின் வட மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, இயல்பைவிட மழை குறைந்திருந்த நிலை மாறி, இயல்பைவிட மழை அதிகமாக பதிவானது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, இயல்பைவிட 1 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருந்தது.
வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, இனிவரும் நாட்களில் ஆங்காங்கே மழை பதிவானாலும் இயல்பையொட்டியே இருக்கும்.
4 நாட்களுக்கு மழை
இதற்கிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல் 22-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன் தொடர்ச்சியாக, 21-ந் தேதி (நாளை மறுதினம்), 22-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை பெய்யும் இடங்கள்
இதுதவிர, நாளை மறுதினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 22-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை, நாளை மறுதினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.