கனமழை எச்சரிக்கை எதிரொலி: 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை அனுப்பிவைப்பு
கனமழை எச்சரிக்கையையொட்டி 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை அனுப்பிவைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கனமழை பெய்யக்கூடிய பகுதிகளில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.
பேரிடர் மீட்பு படை
* மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள 532 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக உள்ளன. கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள 93 மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் கரைக்கும் திரும்புகின்றனர். மேலும் மீனவர்கள் மேற்சொன்ன நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
* நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 121 பன்னோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார்நிலையில் இருக்கின்றன.
கண்காணிக்க வேண்டும்
* பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
* அணைகள், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். உபரிநீரை வெளியேற்றும்போது பொது மக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.