25, 26-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு...!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டள்ளது.
இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எதிர்வரும் கனமழையினை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல். அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். மேலும், பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.