அந்தமானில் சூறைக்காற்றுடன் கனமழை: 156 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது
அந்தமானில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் 156 பயணிகளுடன் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு 150 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் 'இண்டிகோ' பயணிகள் விமானம் நேற்று பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்தமான் வான் எல்லையை விமானம் சென்ற போது, பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் இடி மின்னலும் அதிகமாக இருந்தது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. மேலும், மோசமான வானிலை சீரடையாததால், விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார்.
இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவிட்டனர்.
பயணிகள் விமானம் ரத்து
இதையடுத்து அந்தமானில் இருந்து பயணிகள் விமானம் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு, மாலை 5:10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் விமானம் இன்று(வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், பயணிகள் அனைவரும் இதே விமான டிக்கெட்டில் இன்று அந்தமான் பயணம் செய்யலாம் என்றும், விருப்பமில்லாத பயணிகள் பயணத்தை ரத்து செய்துவிட்டு கட்டணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்களுடன் வாக்குவாதம்
இதைத்தொடர்ந்து பயணிகள் சிலர் விமான நிலைய ஊழியர்களுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள், மோசமான வானிலை காரணமாக விமானம் திரும்பி வந்ததில் எங்கள் தவறு எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து, பயணிகள் சமாதானம் அடைந்து வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஒரு சில பயணிகள் மட்டும் டிக்கெட்டுகளை ரத்து செய்து கொண்டனர்.
இதற்கிடையே அந்தமானில் இருந்து விமானத்தில் சென்னை வருவதற்கு 162 பயணிகள் அந்தமான் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் அந்தமானில் தரையிறங்காமல் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதன் காரணமாக சென்னை வரவேண்டிய 162 பயணிகளும் அந்தமான் விமான நிலையத்தில் தவித்தனர்.