ஆண்டிப்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை:மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம்:போக்குவரத்து பாதிப்பு
ஆண்டிப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 2 கார்கள் சேதமடைந்தன.
பலத்த மழை
தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து மாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சூறைக்காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதில் வைகை அணை வலது கரை பூங்கா பகுதியில் நின்றிருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து அங்கு நிறுத்தியிருந்த 2 கார்கள் மீது விழுந்தன. இதில் 2 கார்களும் அப்பளம்போல் நொறுங்கின. காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மரங்கள் முறிந்தன
வைகை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதன்காரணமாக வைகை அணை, பெரியகுளம் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும் சுமார் 3 மணி நேரம் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதால், வைகை அணை சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கியது. இந்த மழையால் வைகை அணை பகுதிகளில் இரவில் குளிர்ச்சியான வானிலை நிலவியதுடன், குளிர்ந்த காற்றும் வீசியது.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் பெரியகுளம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மரங்களில் இருந்து கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.
இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டடு அந்த வழியாக சென்ற வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.