சூறைக்காற்றுடன் பலத்த மழை


சூறைக்காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 4 May 2023 11:59 PM IST (Updated: 5 May 2023 12:01 AM IST)
t-max-icont-min-icon

கோட்டைப்பட்டினம், கீரனூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை

சூறைக்காற்றுடன் மழை

தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் புதுக்கோட்டையிலும் வெயில் சுட்டெரித்தது. இருப்பினும் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவித்திருந்தது. மேலும் அக்னி நட்சத்திரமும் இன்று தொடங்கியது.

இந்நிலையில், கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயில் வெளுத்து வாங்கியது. இதையடுத்து மாலையில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் சூறைக்காற்றும் வீசியது. இதையடுத்து கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் வீசிய கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வறண்டு கிடந்த குளங்களுக்கு தண்ணீர் வந்தது. பல இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோட்டைப்பட்டினம்

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் கோட்டைப்பட்டினத்தில் உள்ள விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.

காரையூர்

காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஒளியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, நல்லூர், காரையூர் உள்பட சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையினால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகியது.


Related Tags :
Next Story