சூறைக்காற்றுடன் பலத்த மழை


சூறைக்காற்றுடன் பலத்த மழை
x

வேலூர், பென்னாத்தூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் வீட்டின் மீதும் சாலையிலும் மரங்கள் சாந்தன.

வேலூர்

சூறைக்காற்றுடன் மழை

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கணியம்பாடி, கீழ் அரசம்பட்டு, பென்னாத்தூர், அடுக்கம்பாறை, சோழவரம், நாகநதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. வீடுகளின் அருகே விழுந்த ஐஸ் கட்டிகளை சிறுவர்கள் பாத்திரங்களில் சேகரித்தனர்.

இந்த மழை காரணமாக கணியம்பாடி, கீழ் அரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கணியம்பாடி- மலைக்கோடி செல்லும் சாலையில் உள்ள சப்தலிபுரம் பகுதியில் 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. அதேபோல் கேசவபுரம் பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரம் அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

இது குறித்த தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் உடனடியாக மரத்தை அகற்றினர். சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர்

வேலூரை அடுத்த அரியூர், ஸ்ரீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் நேற்று மாலை இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக வேலூரில் இருந்து அரியூர் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் அடிப்பகுதி முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. அந்த சமயத்தில் சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் யாரும் செல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மரம் விழுந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அணைக்கட்டு, ஒடுகத்தூர், ஊசூர், ஸ்ரீபுரம், அரியூரில் இருந்து வந்த பஸ்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. வேலூரில் இருந்து அரியூர், ஸ்ரீபுரம் நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

தகவலறிந்த வேலூர் மாநகராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், மின்ஊழியர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் மரம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது.


Next Story