சூறாவளி காற்றுடன் பலத்த மழை


சூறாவளி காற்றுடன் பலத்த மழை
x

ஜோலார்பேட்டை மற்றும் ஆண்பூர் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து, நகரம் இருளில் மூழ்கியது.

திருப்பத்தூர்

சூறாவளி காற்றுடன் மழை

ஜோலார்பேட்டை, சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் கோடை வெயில் அதிகமாக காணப்பட்டது. மாலை சுமார் 4.30 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சூறாவளி காற்று வீசியதால் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சிறு, சிறு மரங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் மின் கம்பம் மீது மரம் விழுந்தததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் ஜோலார்பேட்டை நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.

மின் ஒயர்

ஜோலார்பேட்டை- நாட்டறம்பள்ளி சாலையில் குடியானகுப்பம் பகுதியில் மின் ஒயர் சாலையில் அறுந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி நோக்கி சென்ற அரசு பஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மின் வாரிய ஊழியர்கள் சென்று மின் இணைப்பை துண்டித்து, சாலையில் அறுந்து விழுந்த மின் ஒயரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு பஸ் புறப்பட்டு சென்றது.

ஆம்பூர்

ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் ஆம்பூரில் இருந்து உமராபாத் செல்லும் வழியில் உள்ள பந்தரப்பல்லி கிராமத்தில் சாலையின் ஓரம் இருந்த 2 மரம் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. அருகே இருந்த மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததில் மின் கம்பங்கள், மின்சார ஓயர்கள் அருந்து விழுந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர், மின்சார துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் மரத்தை வெட்டி பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மின்சாரத் துறையினர் மின் கம்பங்களை புதுப்பித்து மின் இணைப்பை வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story