சூறைக்காற்றுடன் பலத்த மழை
அருப்புக்கோட்டை பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் செல்போன் கோபுரம், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் செல்போன் கோபுரம், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
சூறைக்காற்று
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து புளியம்பட்டி, காந்திநகர், ஆத்திப்பட்டி, வேலாயுதபுரம், பாளையம்பட்டி, ராமசாமிபுரம், கோபாலபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
மாலை 4.45 மணிக்கு தொடங்கிய மழை 5.45 மணி வரை பெய்தது. பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியதால் அருப்புக்கோட்டை நகரம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மழையின் வேகம் குறைந்தாலும் காற்றின் வேகம் குைறயவில்லை.
மரங்கள் சாய்ந்தன
சூறாவளி காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், செல்போன் கோபுரம் சாய்ந்து சாலையில் விழுந்தன.
புளியம்பட்டி, வேலாயுதபுரம், நெசவாளர் காலனி, ஆத்திபட்டி, காந்திநகர், விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பாளையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து மின் வயர்கள் மீது விழுந்தது. தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் பஸ்கள் உள்ளே வர முடியாமல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அருப்புக்கோட்டை பகுதி முழுவதும் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீட்பு பணி
அருப்புக்கோட்டையில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே இருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை தன்னார்வலர்கள் மட்டுமே ஆங்காங்கே சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புத்துறையினர், நகராட்சி ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மரங்கள் சாய்ந்து விழுந்ததாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாலும் மின்தடை செய்யப்பட்டது. சூறாவளிக்காற்று அருப்புக்கோட்டை பகுதியை புரட்டி போட்டு விட்டது என அப்பகுதி மக்கள் கூறினர்.
கலெக்டர் பார்வையிட்டார்
மழையினால் அதிகம் பாதிக்கப்பட்ட நெசவாளர் காலனி, அன்பு நகர், சக்தியவாணி முத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார். மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகளை விரைந்து முடித்து மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார். அப்போது தாசில்தார் அறிவழகன், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர் மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.