சூறாவளி காற்றுடன் கன மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம் மின் தடையால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின


கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால் 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. மின் தடையால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின.

கடலூர்

கடலூர்,

இடி, மின்னலுடன் மழை

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் (சனிக்கிழமை) விடைபெறுகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நேற்று முன்தினமும் காலை முதல் மாலை வரை சூரியன் சுட்டெரித்தது.

இதற்கிடையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

வாழை மரங்கள் சாய்ந்தன

அதன்படி நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. அதன்பிறகு சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டியது. இடி, மின்னலுடன் மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக கடலூர் சுற்றுலா மாளிகை அலுவலகம், தலைமை தபால் நிலையம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

இரவு 10 மணிக்கு பிறகு மழை இல்லை. இருப்பினும் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் கடலூர் அருகே வெள்ளக்கரை, ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், சாத்தங்குப்பம், காட்டுப்பாளையம், பண்ருட்டி, பத்திரக் கோட்டை, குறிஞ்சிப்பாடி, வடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரோடும் சாய்ந்து விழுந்தது.

500 ஏக்கர் சேதம்

மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 500 ஏக்கர் வாழை சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர். இவற்றில் 500 ஏக்கர் வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் முறிந்து விழுந்தது. இதை பார்த்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். கடன் வாங்கி பயிரிட்டுள்ள வாழை மரங்கள் இப்படி சூறைகாற்றில் விழுந்து விட்டதே என்று கண்ணீர் வடித்தனர்.

இது தவிர ஒரு சில இடங்களில் சாலையோரம் நின்ற மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரக்கிளைகளும் முறிந்து விழுந்ததை பார்க்க முடிந்தது. இந்த காற்றில் நெல்லிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள 30 மின்மாற்றியில் இருந்த கருவிகள் பழுதானது. 7 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது.

40 கிராமங்கள் இருளில் மூழ்கின

இதன் காரணமாக மின் தடை ஏற்பட்டு, நெல்லிக்குப்பம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 40 கிராமங்கள் இருளில் மூழ்கின. இருப்பினும் மின்துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக பழுதை சீரமைத்து, மின்சாரம் வழங்கினர். சில இடங்களில் மின்தடையை சரி செய்யும் பணியில் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் வானமாதேவி, குடிதாங்கி, பண்ருட்டி, விருத்தாசலம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 45.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

குடிதாங்கி- 45, கடலூர்- 39.80, பண்ருட்டி- 24, பரங்கிப்பேட்டை - 8, விருத்தாசலம்-1. மாவட்டத்தில் சராசரியாக 8.34 மில்லி மீட்டர் பதிவானது.

கோவில் கோபுரம் சேதம்

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடைவீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மின்னல் தாக்கி பூவராகசுவாமி கோவில் சொர்க்கவாசல் வட கோபுரத்தின் உச்சி பகுதி உடைந்து கீழே விழுந்துவிட்டது. கோபுரம் சேதமடைந்த சம்பவத்தால் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Next Story