பலத்த காற்றுடன் கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பக்காற்று
அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்துவதை போல் வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரங்களில் அனல்காற்று வீசியது. இரவு நேரத்தில் மின்விசிறிக்கு கீழ் படுத்து இருந்தாலும் வெப்பக்காற்று தான் வீசியது. இதனால் மழையை எதிர்பார்த்து மக்கள் இருந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.
கன மழை
இரவு 6.30 மணிக்கு மேல் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் மழை பெய்யுமோ? என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறிதுநேரத்தில் திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை ½ மணிநேரம் நீடித்தது.
இந்த மழையினால் பூமி நனைந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடந்து வருவதால் இந்த மழை குறுவை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பருத்தி நனைந்தது
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. நேற்று பெய்த திடீர் மழையால் விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமானது. ஏற்கனவே பருத்திக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மழையில் நனைந்து பருத்தி வீணாகியதால் போதிய விலை கிடைக்குமா என விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், நாகங்குடி, லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, சித்தனக்குடி, பாரதிமூலங்குடி, ஓகைப்பேரையூர், திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், கோரையாறு, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, வாழச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் கூத்தாநல்லூர் பகுதியில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.