விழுப்புரம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது


விழுப்புரம் பகுதியில்    இடி-மின்னலுடன் பலத்த மழை    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது
x

விழுப்புரம் நகர பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

விழுப்புரம்

பலத்த மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிக்குட்பட்ட அநேக இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணிக்குமேல் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. மாலை 5 மணியளவில் குளிர்ந்த காற்றுடன் லேசாக பெய்யத்தொடங்கிய மழையானது மாலை 6 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது.

சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக விழுப்புரம் நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. விழுப்புரம் சர்வேயர் நகர், கணேசன் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் விழுப்புரம் பகுதி சுற்றுவட்டார கிராமங்களான காணை, பிடாகம், கண்டமானடி, கோலியனூர், சாலைஅகரம், , வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story