இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை


இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை
x

வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. குடியாத்தம் பகுதியில் 52 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. குடியாத்தம் பகுதியில் 52 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இடி, மின்னலுடன் பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதிய வேளையில் சாலைகள், வீதிகளில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. மேலும் அனல் காற்றும் வீசியது.

அதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இரவு நேரத்தில் மின்விசிறியில் இருந்து வெப்ப காற்று வெளியேறியது. இதனால் கோடை மழை பெய்து வெப்பத்தை தணிக்காதா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. தொடர்ந்து சிறிதுநேரம் தொடர்ச்சியாக மழை கொட்டித் தீர்த்தது. மழை காரணமாக வேலூர் நகரில் சுமார் 30 நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

வேலூர் பகுதியில் பெய்த மழையினால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கொணவட்டம், திடீர்நகர், சம்பத்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது.

அதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர். வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும் என்ற அச்சத்தில் பல குடும்பத்தினர் தூங்காமல் தங்கள் உடைமைகளை பத்திரமான இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கால்வாய் அடைப்புகளை அகற்றி மழைநீரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒரு மாடு பலியானது. 2 குடிசை வீடுகள் பகுதியாகவும், ஒரு குடிசை வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமானது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக குடியாத்தம் பகுதியில் 52 மில்லிமீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

விரிஞ்சிபுரம்-43, மேல்ஆலத்தூர்-32.8, அம்முண்டி சர்க்கரை ஆலை-23.6, வேலூர்-21.8, காட்பாடி ரெயில் நிலையம்-21, பொன்னை-19.2, பேரணாம்பட்டு-1.5.


Next Story