விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கிராமப்புறங்களில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்
விழுப்புரம்
பலத்த மழை
தமிழகத்தில் கத்தரி வெயில் காலம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையாமல் சுட்டெரித்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்து வருகிற நிலையில் இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி, வதைத்து வந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை 15 நிமிடம் பெய்து ஓய்ந்தது. அதன் பிறகு மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் இடி- மின்னலுடன் பெய்யத்தொடங்கிய மழை, இடைவிடாமல் ஒரு மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீர்
இந்த மழையின் காரணமாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பொய்யப்பாக்கம், காகுப்பம், கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகளும் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் அவ்வழியாக செல்ல முடியாமல் விழுப்புரம்- புதுச்சேரி சாலை வழியாக மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.
மின் தடை
மேலும் விழுப்புரத்தை சுற்றியுள்ள கோலியனூர், சாலையாம்பாளையம், வளவனூர், நன்னாடு, தோகைப்பாடி, பெரும்பாக்கம், காணை, பிடாகம், பில்லூர், ஆனாங்கூர், மரகதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி- மின்னலுடன் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு கிராமப்புறங்களிலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது நள்ளிரவு மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் கொசுத்தொல்லையால் மிகவும் அவதிப்பட்டனர்.
இதேபோல் திண்டிவனம், செஞ்சி, முகையூர், கெடார், மணம்பூண்டி, விக்கிரவாண்டி, வானூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது.
மின்கம்பிகளை சீரமைக்கும் பணி
மழை ஓய்ந்த பின்னர் நேற்று காலை முதல் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைத்து மின்சார வினியோகம் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களாக கோடை வெயில், பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.