குமரியில் இடி- மின்னலுடன் பலத்த மழை
குமரி மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு பயங்கர இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கு முன்னதாக இரவு 11 மணியில் இருந்தே புழுக்கமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து திடீரென சீதோஷ்ண நிலை மாறி மழை பெய்தது.
இந்த மழை சுமார் 1 மணி நேரம் வரை விடாமல் பெய்தது. அதோடு பயங்கர இடி- மின்னல் ஏற்பட்டதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். இடி, மின்னல் நிற்கும் வரை தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல சாலைகளில் மழைநீருடன் சோ்த்து கழிவுநீரும் சேர்ந்து ஓடியதால் சாலைகளில் குப்பைகளாக காட்சி அளித்தன.
கடும் அவதி
இதேபோல் மயிலாடி, திற்பரப்பு, குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும் மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை காணப்பட்டது. அதே சமயம் நேற்று காலையில் வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. மழை பெய்ததற்கான அறிகுறியே தென்படாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
குமாி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 34.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுபோன்று கொட்டாரம்-5.2, மயிலாடி-28.4, மாம்பழத்துறையாறு-2, திற்பரப்பு-16.3, குருந்தன்கோடு-15.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகள் நிலவரம்
மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 146 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 95 கனஅடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.87 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 41.35 அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 8.82 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 8.92 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 13.20 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 0.20 அடியாகவும் உள்ளது.