தஞ்சையில், இடியுடன் பலத்த மழை
தஞ்சையில், இடியுடன் பலத்த மழை
தஞ்சையில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.
கோடைவெயில்
தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திர தொடக்க காலத்தில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்தில் அனல் காற்றுவீசுவதால் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலர் துணியால் முக்காடு போட்டு கொண்டு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்தபடி செல்கின்றனர். இரவு நேரத்திலும் அனல் தாக்கம் நீடிப்பதால் மின்விசிறிக்கு கீழே படுத்திருந்தாலும் வியர்வையில் நனைந்துவிடுவதால் தூக்கமின்றி சிரமப்படுகின்றனர்.
மக்கள் எதிர்பார்ப்பு
வெயில் கொடுமையில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, கூழ், மோர் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மழை பெய்யாதா? என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
தஞ்சை மாநகரில் நேற்றுமுன்தினம் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லேசாக மழை தூறல் மட்டும் விழுந்தது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று பகல் நேரத்தில் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது.
பலத்த மழை
மாலை 4.30 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு வந்து, திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததுடன் காற்று பயங்கரமாக வீசியது. குறிப்பாக விளார்சாலை, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் சூறாவளி காற்றை போல் வேகமாக வீசியது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால், நாஞ்சிக்கோட்டை சாலை, விளார் சாலையில் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
தஞ்சை மோத்திரப்பசாவடி கம்பி பாலம் அருகே மரக்கிளை முறிந்து, வீட்டின் மீது விழுந்தது. இதில் ஒரு பக்க சுவர் கீழே விழுந்ததுடன் ஓடுகள் வீட்டில் இருந்த ஒருவர் தலையில் விழுந்ததால் காயம் ஏற்பட்டது. இதேபோல, நாஞ்சிக்கோட்டை சாலை ரெயில் நகரில் மின்கம்பம் சாய்ந்ததில் மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
கீழ்பாலத்தில் தேங்கிய தண்ணீர்
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வழக்கம்போல் ரெயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. பின்னர் கீழ்ப்பாலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
சுமார் 1 மணிநேரம் பலத்த மழையாக பெய்தது. பின்னர் தொடர்ந்து பரவலாகமழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி, நாஞ்சிக்கோட்டை
அதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பத்தினால் தவித்த மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றன. பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.