அரியலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை


அரியலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை
x

அரியலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று காலை முதல் மிகவும் வறட்சியான சூழ்நிலை நிலவியது. இரவு 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானது.

சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது விதைப்பு பணி நிறைவடைந்த நிலக்கடலை, சோளம் பயிர்களுக்கும், நடவு பணி நிறைவடைந்துள்ள குறுவை நெல் சாகுபடிக்கும், பூத்து, காய்க்கும் பருவத்தில் உள்ள செடி, முருங்கை, துவரை ஆகிய பயிர்களுக்கு நேற்று பெய்த மழை நல்ல பலன் தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயில் தாக்கம் நேற்று மாலை குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் உடையார்பாளையம், முனியத்தரியன்பட்டி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், தத்தனூர், வெண்மாண்கொண்டான், மனகெதி, சோழங்குறிச்சி, அழிசிகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 9 மணி வரை நீடித்தது. மின்சாரம் இரவு முழுவதும் துண்டிக்கப்பட்டது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story