பெரம்பலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை; வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
பெரம்பலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது. ஆனால் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இடி-மின்னலுடன் சுமார் 1½ மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது.
மழை பெய்யும் போது சூறைக்காற்றும் வீசியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
வீட்டின் மேற்கூரை இடிந்தது
நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு பெரம்பலூர் தாலுகா, கீழக்கணவாய் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. ராமச்சந்திரன் குடும்பத்தினர் மழை பெய்யும் போது சுதாரித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அவர்கள் அரசின் நிவாரணம் கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு நகர்ப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளிலும் மழைநீர் புகுந்தது. குரும்பலூர், பாளையம், அன்னமங்கலம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்த போது மின்சாரம் தடைபட்டது. சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.