ஆண்டிப்பட்டி அருகே காற்றுடன் பலத்த மழை:பட்டுக்கூடு வளர்ப்பு கூடங்கள் இடிந்து தரைமட்டம்
ஆண்டிப்பட்டி அருகே காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பட்டுக்கூடு வளர்ப்பு கூடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கர்ணன், வேல்முருகன், மாடசாமி ஆகியோருக்கு சொந்தமான 3 பட்டுக்கூடு வளர்ப்பு கூடங்கள் இடிந்து தரைமட்டமானது.
பட்டுக்கூடு வளர்ப்பு கூடத்தின் மேற்கூரை 100 மீட்டர் தூரம் வரை காற்றில் பறந்து ஓடையில் தூக்கி வீசப்பட்டது. மழை பெய்தபோது பட்டுக்கூடு வளர்ப்பு கூடங்களில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.