கனமழையால் வெள்ளப்பெருக்கு-பாறைகள் உருண்டன: இரவில் சதுரகிரி மலையில் தவித்த பக்தர்கள்
கனமழையால் சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பாறைகளும் உருண்டன. கோவிலில் தரிசித்து திரும்பிய பக்தர்கள் நடுவழியில் தவித்ததால் விடிய, விடிய பணி நடந்து சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி கோவில்களில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்அன்று அதிகாலை முதலே மலைப்பாதை வழியாக சதுரகிரி மலை ஏறி, நடைபயணமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கனமழை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததால் அங்குள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கன மழை பெய்ய தொடங்கிய உடனே கோவிலில் இருந்து பக்தர்கள் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகப் பகுதியில் ஏராளமான பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் மலையில் தவித்தனர். மழைக்கு முன்னதாக இறங்கிய பக்தர்கள் நடுவழியில் சிக்கினர். மழையில் செய்வதறியாது திகைத்த அவர்களை மீட்டு, அடிவாரத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
பக்தர்கள் மீட்பு
இதற்கிடையே சங்கிலி பாறை ஓடைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல பக்தர்கள் சிக்கி தவித்தனர். அந்த சமயத்தில் காராம் பசுத்தடம் பகுதியில் மிகப்பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அந்த பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், சங்கிலி பாறை ஓடை, மாங்கனி ஓடைகளில் மாட்டிக் கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களை மீட்கும் பணியில் இறங்கினர். காட்டாறுகளுக்கு குறுக்கே கயிறு கட்டி விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு அழைத்து வந்தனர்.