அந்தியூர், பர்கூர் பகுதியில் பலத்த மழை: வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது


அந்தியூர், பர்கூர் பகுதியில் பலத்த மழை:  வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது
x

வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்து பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.46 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக தாமரைக்கரை, தாளக்கரை, கொங்காடை ஆகிய மலைப்பகுதிகள் உள்ளன.

இங்கு பெய்யும் மழை நீரானது, வரட்டுப்பள்ளம், கல்லுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம் வழியாக வரட்டுப்பள்ளம் அணையை வந்தடைகிறது.

கடந்த 23-ந் தேதி காலை 8 மணி அளவில் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.46 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நேற்று நிரம்பியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 33.46 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8.30 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த ஆண்டில் வரட்டுப்பள்ளம் அணை 5-வது முறையாக நிரம்புவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story