ஈரோட்டில் கனமழை: கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு


ஈரோட்டில் கனமழை:  கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு
x

ஈரோட்டில் பெய்த கனமழையால் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தூக்கமின்றி பரிதவித்தனர். இந்தநிலையில் ஈரோடு சூளை பகுதியில் கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதிக்கப்பட்டு இருந்த ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலமாக குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் ஓடையில் சென்று கலந்துவிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பிறகு தண்ணீரை நிறுத்திவிட்டு, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஈரோடு மாநகராட்சி 5, 8, 9, 12, 18 ஆகிய வார்டுகளான சி.என். கல்லூரி பகுதி, செங்குந்தர்நகர், எஸ்.எஸ்.வி.நகர், மாணிக்கம்பாளையம், வசந்தம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.


Related Tags :
Next Story