குமரியில் சாரல் மழை- திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு


குமரியில் சாரல் மழை- திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு
x

கோப்புப்படம் 

கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் அடையா மடை பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கொட்டாரம், தக்கலை, இரணியல், கோழிப்போர் விளை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் 12-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.34 அடியாக உள்ளது. அணைக்கு 570 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 122 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும், வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது அணைக்கு 432 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.2 அடியாக உள்ளது. அணைக்கு 211 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும் உள்ளது.


Next Story