நீலகிரியில் தொடர் மழை: 2 வீடுகள் இடிந்து விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூரில் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூரில் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
கனமழை எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகளால் தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஊட்டியில் கடும் குளிர் காற்று வீசியது. இதனுடன் சேர்ந்து அவ்வப்போது விட்டுவிட்டு லேசாக மழை பெய்து கொண்டே இருந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த தொடர் மழை காரணமாக ஊட்டியிலிருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் கவர்னர் சோலை பகுதியில் சாலையோரம் பெரிய மரம் சாய்ந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். இதே போல் சின்னக்கொரையில் இருந்து தாய்சோலை செல்லும் வழியில் சாலையில் மரம் விழுந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பஸ்ஸில் வந்த பயணிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசாக மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது. மண் சரிவுகள் ஏற்பட்டு காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக வேலைக்கு சென்றோர், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவதிப்பட்டனர். இதேபோல் இன்று (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர்
கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் வனத்துறை சோதனை சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.
தொடர்ந்து மின் கம்பங்களும் சேதம் அடைந்தது. அதன் பின்னர் அரசு தகைசால் மேல்நிலைப்பள்ளி, ஹெல்த் கேம்ப், கெவிப்பாரா, ராக்லேன்ட் தெரு, பாலவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் அடியோடு துண்டித்தது. தகவல் அறிந்த கூடலூர் நிலைய அலுவலர் மார்க்கின் தலைமையிலான தீயணைப்பு படையினர் மற்றும் மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சீரமைப்பு பணிகள்
தொடர்ந்து கொட்டும் மழையை பொருட்படுத்தாது தீயணைப்புத் துறையினர் மரக்கிளைகளை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மின்வாரியத்தினர் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். ஆனால் மின்சாரம் இல்லாமல் இருளில் கிடந்ததாலும், மின் கம்பிகள் முழுமையாக சேதம் அடைந்ததால் மின்வாரியத்தினரால் சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து நேற்று காலை 9 மணி முதல் மின் கம்பிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது.
வீட்டின் சுவா் இடிந்தது
இதேபோல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டி வேலு என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டனர். கூடலூர் சிவ சண்முக நகரை சேர்ந்த நாகராஜா என்பவரது வீடு பலத்த மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடைய வில்லை. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.தொடர்ந்து பெய்யும் மழையால் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்சார வாரியத்தினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
மழை அளவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டாில் வருமாறு:-
தேவாலா 38, ஓவேலி 35, பந்தலூர் 33, சேரம்பாடி 54, அப்பர் பவானி 41, அவலாஞ்சி 72, செருமுள்ளி 79.