கன மழை: பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கிடுகிடுவென உயரும் பில்லூர் அணை நீர்மட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 93.50 அடியாக இருந்தது. மின் உற்பத் திக்காக 2 எந்திரங்களை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவு 10.20 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது.

வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர தொடங்கியது. அதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 97 அடியை எட்டியது.

இதனால் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டன. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த பலத்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது.

அணைக்கு காலை 11 மணிக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி, பகல் 12 மணிக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி, பகல் 2.30 மணிக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடி என படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 97 அடியை தாண்டியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

எனவே பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. இதன்காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் ஓடந்துறை பவானி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. விளையாட்டு மாரியம்மன் கோவிலையும் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருவாய் துறையினர் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் பூமா, பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம் ஆகிய கிராம பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆற்றின் வெள்ளப் வெள்ளப்பெருக்கு குறித்தும் வருவாய் துறை சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தாசில்தார் மாலதியிடம் கேட்டு அறிந்தார். அவருடன் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். மேலும் ஓடந்துறை பவானி ஆற்றின் பாலத்தின் மீது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து ஒலிபெருக்கி மூலம் போலீசாா் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story