ஊட்டியில் கனமழை:5 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது-பொதுமக்கள் அவதி
ஊட்டி சுற்று வட்டார பகுதியில் நேற்று மழை வெளுத்து வாங்கியதால் 5 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஊட்டி
ஊட்டி சுற்று வட்டார பகுதியில் நேற்று மழை வெளுத்து வாங்கியதால் 5 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பலத்த மழை
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கோவை, ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 30-ந் தேதி நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் குரும்பாடி பகுதியில் சாலையில் மரம் விழுந்து ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் நேற்று நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது
இதேபோல் நேற்று முன்தினமும், நேற்றும் ஊட்டி அடுத்த மேல் கல்லட்டி சாலையில் கன மழை பெய்தால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன. இதேபோல் அந்த பகுதியில் இருந்து 5 வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பல்வேறு சாமான்களும் வீணாகிப் போனது.
தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தத்தளித்த குடியிருப்பு வாசிகள் வீட்டின் முன் பகுதியில் லேசாக துளையிட்டு தண்ணீரை வெளியேற்றினர்.
சுற்றுலா பயணிகள் அவதி
இதற்கிடையே கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, படகு இல்லங்களில் குவிந்தனர். நேற்று காலை முதல் மதியம் வரை நன்றாக வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் மழை கொட்டி தீர்த்தது.
ஆரம்பத்தில் மழை பெய்து போது சுற்றுலா பயணிகள் கொண்டாட்டத்துடன் மழையில் நனைந்தபடியும் குடைகளை பிடித்து படியும் ஆட்டம் ஆடினர்.
இதன் பின்னர் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், அவதி அடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக சுற்றுலா தளங்களில் இருந்து ஓட்டல்களுக்கு சென்றனர். இதேபோல் கோடை மழை சிறப்பாக பெய்து வருவதால் விவசாயம் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.