தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கனமழை
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவில் மழை பெய்தது. தேனி, பெரியகுளம், சோத்துப்பாறை, மஞ்சளாறு, போடி, வீரபாண்டி போன்ற இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய, விடிய சாரல் மழை பெய்தது.
பின்னர் நேற்று அதிகாலையில் இருந்து காலை 8 மணி வரையும் கனமழை நீடித்தது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே கல்லூரிகளுக்கு சென்றனர்.
மறுகால் பாய்ந்த கண்மாய்
போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி கொட்டக்குடி ஆற்றில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப் பாய்ந்தது. தேனி பகுதியில் பெய்த மழையால் மீறுசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அங்கு சிலர் வலைகள் விரித்து மும்முரமாக மீன் பிடித்தனர்.
கண்மாயில் மறுகால் பாய்ந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக பாய்ந்து, தேனி எரிவாயு தகன மேடை அருகில் கொட்டக்குடி ஆற்றில் சங்கமித்தது. அங்கு அருவி போல் தண்ணீர் கொட்டியது. இதனை மக்கள் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சோத்துப்பாறையில் 72 மி.மீ, மஞ்சளாறு அணையில் 70 மி.மீ. மழை பெய்தது. மேலும், போடியில் 62.6 மி.மீ., வீரபாண்டியில் 12.4 மி.மீ., அரண்மனைப்புதூரில் 11.2 மி.மீ., வைகை அணையில் 5.4 மி.மீ. மழையளவு பதிவானது.