மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. அதேபோல் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது.

மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் 51 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று 3,184 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்த மழையால் நேற்று முன்தினம் 48.90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5.30 அடி உயர்ந்து 54.20 அடியாக உள்ளது.

இந்த அணையில் இருந்து குடிநீருக்காக 355 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டமும் 62.47 அடியில் இருந்து 72.93 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 10.46 அடி உயர்ந்து இருக்கிறது.

இதேபோல் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 41.30 அடியில் இருந்து 43.10 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 556 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதற்கிடையே, இந்த அருவி பகுதியில் கடந்த 4 நாட்கள் பராமரிப்பு பணி நடைபெற்றதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் குளிக்கலாம் என்று வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால், மழை காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் அருவியை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story