திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு


திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. பகலில் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. பகலில் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடுமையான வெயில்

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது.

தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து மாசி மாதத்திற்குள் பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். ஆனால் பங்குனி மாதம் நிறைவு பெற்ற நிலையிலும் பனியின் தாக்கம் குறைந்தபாடில்லை. திருவாரூரில் அடிக்கடி இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் கடுமையாக இருக்கிறது.

திருவாரூரில் பனிமூட்டம்

திருவாரூரில் நேற்று அதிகாலை வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வயல் வெளிகளில் புகைமூட்டம் போல் காட்சி அளித்தது. திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்தன. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்திலும் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள சுவெட்டர், குல்லா, மப்ளர் உள்ளிட்டவற்றை அணிந்து சென்றனர். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் நேற்று சிரமப்பட்டனர்.

மன்னார்குடி

இதேபோல் நேற்று காலை மன்னார்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

பகலில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் காலை 8 மணி வரை பனிப்பொழிவு இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புவி வெப்பமடைவது அதிரித்து வருவதால் பருவ காலத்தில் பெரும் மாறுபாடு ஏற்படுவதை இது உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

நன்னிலம்

இதேபோல நன்னிலம் பகுதிகளில் கடும் நேற்று காலையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

திருவாரூர் -மயிலாடுதுறை சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். இந்த பனிப்பொழிவால் ெபாதுமக்கள், நடை பயிற்சி செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிபட்டனர்.

திருமக்கோட்டை

இதே போல் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று காலை கடும் குளிருடன் பனிப்பொழிவு ஏற்பட்டது.


Next Story