பொள்ளாச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வால்பாறை, ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், பொள்ளாச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பொள்ளாச்சி
வால்பாறை, ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், பொள்ளாச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலைகள் அகலப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்திற்கு பதிலாக செயல்படுத்தப்படும் இந்த ரவுண்டானா திட்டம் பயன் அளிக்கவில்லை. இதனால் பொள்ளாச்சி நகரம் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வால்பாறை, டாப்சிலிப், ஆழியாறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
மேலும் கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக வெளியூர்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
இதற்கிடையில் நேற்று முகூர்த்த நாள் என்பதாலும் பொள்ளாச்சியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். ஆஸ்பத்திரிகள் உள்ள நியூஸ்கீம் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு போக்குவரத்து போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வாகனங்களை மாற்றுப்பாதைகளில் திருப்பி விட்டு, போக்குவரத்தை சரிசெய்தனர்.
தீர்வு காண வழி
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் சாலைகள் அகலப்படுத்தப்பட்ட பிறகும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, பி.எஸ்.என்.எல். அலுவலக சாலைகளில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவை அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் கவனம் செலுத்தும் போலீசார், இதுபோன்று விதிமுறைகளை மீறி சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே போலீசார் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மீண்டும் பூட்டு போடுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.