சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர் -ஆற்காடு சாலையில் கடந்த 2 நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் மறியல், ஆபத்தான கட்டிடம் உள்ளிட்ட காரணங்களால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் பலர் சர்வீஸ் சாலை வழியாகவும், கிரீன் சர்க்கிள் வழியாகவும் காகிதப்பட்டறை, தனியார் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர்.
இதனால் ஒரு வழிப்பாதையான சர்வீஸ் சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. மேலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் 3 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்த பின்னர் வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சர்வீஸ் சாலையில் போக்குவரத்து சீரானது.